பூரி:ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் சர்ச்சைக்குள்ளான பூரி ஜெகநாதர் கோயில் கரூவூல புதையல் அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி வரும் ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கும் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழும் பூரி ஜெகநாதர் கோயிலில் கரூவூல புதையல் அறையில் மன்னர்கள் தெய்வங்களுக்கு வழங்கிய விலைமதிப்பற்ற ஆபரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறை கடைசியாக 1985ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி திறக்கப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு அறையை மீண்டும் திறக்குமாறு ஒடிசா உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. அந்த அறைக்கான சாவியை தேடியபோது, அது காணவில்லை என்று தெரியவந்தது. இந்தச் சூழலில் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக ஒடிசா சென்ற பிரதமர் மோடி, “பிஜேடி ஆட்சியில் பூரி ஜெகநாதர் கோயில் பாதுகாப்பாக இல்லை. ஆலயத்தின் கரூவூல அறையின் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டது. அதனை தமிழ்நாட்டிற்கு அனுப்பியது யார்?” என பேசினார். ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு குறித்து பிரதமர் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.