மதுரை:இன்று காலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் திருச்சி காஜாமலையில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் விடுதியை காலி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஹோட்டலை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கட்சியினரை உடனடியாக வெளியேற வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக அவசர வழக்காக விசாரிக்க எஸ்.ஆர்.எம் நிறுவனம் சார்பாக முறையீடு செய்யப்பட்டது. அதில், “விடுதியை திடீரென காலி செய்ய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முயற்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல எனவும், போதிய கால அவகாசம் வழங்காமல் இவ்வாறு செய்வது ஏற்கத்தக்கதல்ல என்றும், ஆகவே சுற்றுலா வளர்ச்சிக் கழக நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" எனவும் முறையீடு செய்யப்பட்டது.