கடலூர்: சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "மக்களுக்கு முன்னால் வாக்குறுதி கொடுப்பதற்குத் தைரியம் வேண்டும். பிரதமர் மோடி 10 ஆண்டு பிரதமராக இருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். அதுபோல் குஜராத் மாநிலத்திலும் முதலமைச்சராக இருந்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். பெண் வேட்பாளருக்குப் பிரச்சாரம் செய்வது எனக்குக் கிடைத்த பாக்கியம். நமது ஆதரவைப் படித்த பட்டதாரி பெண் வேட்பாளருக்குக் கொடுக்க வேண்டும்.
சிதம்பரத்திற்கும் சரி தமிழ்நாட்டிற்கும் சரி 10 ஆண்டுகளாகப் பல திட்டங்களைக் கொண்டு வந்தார் மோடி. அரிசி இல்லை என்ற கவலைக்கு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் 80 கோடி மக்களுக்குத் தனிநபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசி வீதம் 2020 முதல் இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக மோடி பாடுபட்டார். நெல், எள், சோளம், வேர்க்கடலை ஆகியவற்றிற்கு அதிக விலை வழங்கப்பட்டு உள்ளது. 2023 வரை 1 கோடியே 22 லட்சம் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யக் கொடுத்திருக்கிறார்கள். 1 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நேரடியாகச் சென்று இருக்கிறது.
திமுக, காங்கிரசின் தோழமைக் கட்சியாக 10 வருடம் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு நல்லது எதையும் செய்யவில்லை. அவர்கள் ஊழலுக்குப் பெயர் போனவர்கள் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், வங்கிக் கடன் வழங்கியதில் ஊழல் என 10 வருடத்தை ஓட்டினார்கள்.
அந்த 10 ஆண்டு கால ஆட்சியால் நாடு நிலை குலைந்து போய்விட்டது. கீழிருந்து ஐந்தாவது நிலைக்குச் சென்ற இந்தியாவை, பிரதமர் மோடி இந்த 10 ஆண்டுகளில் காப்பாற்றி இருக்கிறார். இன்றைக்கு மேலிருந்து ஐந்தாவது இடத்திற்கு வந்து விட்டது. அடுத்த 2 வருடங்களில் மூன்றாவது இடத்திற்குச் செல்லும் என்றும் வாக்குறுதி கொடுத்தார்.