அமைச்சர் துரைமுருகன் பேட்டி வேலூர்:பொன்னை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று (ஜன.22) இதனுடைய கட்டுமான பணிகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த துரைமுருகன், "காலாவதியான கல்குவாரியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகத் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்குவாரிகள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது".
இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் பூஜை செய்யத் தமிழக அரசும் திமுகவும் தடை விதித்துள்ளதாக மத்திய அமைச்சர் குற்றம் சாட்டியது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, "மத்திய அமைச்சர் இப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளைக் கூறக்கூடாது இது மந்திரிக்கு அழகு அல்ல" என தெரிவித்தார்.
மேலும், பொன்னை பேரூராட்சியாக உருவாக்கப்படுமா என்ற கேள்விக்கு, விரைவில் பொன்னை பேரூராட்சியாக உருவாக்கப்படும் இது என் கவனத்தில் உள்ளது என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கிய அதிமுக.. முக்கிய குழுக்கள் அறிவிப்பு!