கோயம்புத்தூர்: நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினரின் கைவண்ணத்தில் தயாரான யானை பொம்மைகள் அமெரிக்காவின் நியூயார்க் நகர அருங்காட்சியக கண்காட்சிக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பது குறித்து, முன்னாள் வனத்துறை அதிகாரியும், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத் துறை செயலாளருமான சுப்ரியா சாகு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை, கூடலூர் பகுதிகளில் சாலையோரங்களில் காணப்படும் லேண்டானா எனப்படும் உண்ணி செடி குச்சிகளை பயன்படுத்தி யானைகள் உருவங்களை உருவாக்க, தொரப்பள்ளி பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் பயிற்சி அளித்து வருகின்றது. இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதோடு, காடுகளில் உள்ள உண்ணி செடிகளை அகற்றும் வகையில் கலைநயத்துடன் யானைகள் மற்றும் இதர உருவங்களையும் உருவாக்கி வருகின்றனர்.
இப்பணியில், பெட்டகுரும்பா, பணியா, காட்டுநாயக்கன் மற்றும் சோலிகா சமூகங்களைச் சேர்ந்த 200 பழங்குடி கைவினைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தயாரித்த யானை பொம்மைகளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, 100க்கும் மேற்பட்ட யானை பொம்மைகள் நீலகிரி மாவட்டத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்திற்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டன. இது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.