நீலகிரி:நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியைக் கொண்டதாகும். இப்பகுதியில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், சமீப காலமாக உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக, அவ்வப்போது மனித வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. அவ்வாறு வரும் வனவிலங்குகள் சில நேரங்களில் அப்பகுதி மக்களைத் தாக்குவதால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று (பிப்.13) குன்னூர் அருகே உள்ள உபாசி அலுவலகத்தில் இரவு நேரத்தில் உலா வந்த கரடி அப்பகுதியில் நீண்ட நேரமாகச் சுற்றித் திரிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்கு உள்ள அலுவலக அறை கதவை கரடி தன் கையால் உடைத்து அறைக்குள் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பகுதி மக்களைப் பீதி அடையச் செய்துள்ளது.