நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்திற்கு அரக்கோணத்தில் இருந்து 32 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உதகை வந்தடைந்தனர். இந்நிலையில், இன்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கொண்டு வந்துள்ள மீட்பு பணிகளுக்கான உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவியா தண்ணீரு பார்வையிட்டார்.
அதற்குபின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “நீலகிரியில் 20 நாட்களுக்கும் மேலாக கொட்டித் தீர்க்கும் கனமழையின் காரணமாக மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ள சென்னையிலிருந்து புவியியல் துறையினர் குழு வர உள்ளனர்.
மேலும், தற்போது கூடலூர் பகுதியில் புவியியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் தலைமையில் பொதுப்பணித் துறையினர் கோக்கால் பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு பூமியில் உள்வாங்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இரண்டாவது குழுவினர் வரும் வாரங்களில் வர உள்ளனர்.
எனவே, 24 மணி நேரமும் வருவாய்த்துறை, தீயணைப்புத் துறையினர் உட்பட அனைத்து துறைகளைச் சேர்ந்த 500 பேர் மீட்புப் பணிகளுக்கு தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் நிலையில், பேரிடர் நடைபெற்றால் உடனடியாக 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பாதுகாப்பாக மக்களை மீட்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.