ஈரோடு: நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களத்தில் இருக்கும் பாஜக நிர்வாகிகளை, வேட்பாளர் எல்.முருகன் சந்திக்கும் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எல்.முருகன், "பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா இன்று (மார்ச் 26) நடைபெற்று உள்ளது. சக்தி வாய்ந்த கோயிலில் அம்மனை தரிசித்து விட்டு தேர்தல் பணியை தொடங்கியுள்ளோம்.
நேற்று நீலகிரியில் பாஜக சார்பில் வேட்புமனுய்ஜ் தாக்கல் செய்துள்ளோம். இன்று நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என தரிசனம் செய்தேன். இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால சாதனைகள் குறித்தும், அவரின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து வாக்குகளை சேகரிப்போம்.