ஈரோடு:நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. இந்நிலையில் இதற்கான பிரச்சாரம் அரசியல் கட்சிகளுக்கிடையே தமிழ்நாட்டில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பவானிசாகர் சட்டமன்ற தொகுதி கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பேசிய ஆ.ராசா, '1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் (2g Spectrum Scam) என குற்றம் சாட்டினீர்களே, இன்றைக்கு அதே ஸ்பெக்ட்ரத்தை ஏலம் முறை இல்லாமல் தாரைவார்த்து கொடுத்து அந்த கம்பெனிகளில் எல்லாம் பாஜக தேர்தல் நிதி பெற்றுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மோடிக்கும் இருக்கு.. உங்களுக்கும் இருக்கு' என என்டிஏ கூட்டணிக்கு சவால் விடுத்தார்.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தோழமை கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலத்தில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்ததற்கு பிறகு ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி அரசு வீட்டிற்கு அனுப்பப்பட்டால், இந்த இரண்டு மாத காலத்தில் எடுத்த முடிவிற்கு விசாரணை கமிஷன் போட்டால் மோடி உட்பட எல்லாருக்கும் இருக்கு. உங்களுக்கு இருக்கு; அவ்வளவு தப்பு நடந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏலம் விடுவதாக சொன்னீர்களே.
அன்றைக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் என எல்லாரையும் நம்ப வைத்தீர்களே. இன்றைக்கு என்ன தெரியுமா? அதே ஸ்பெக்ட்ரத்தை ஏலம் முறை இல்லாமல் தாரை வார்த்து கொடுத்துள்ளீர்களே. அந்த கம்பெனிகள் எல்லாம் பாஜகவிற்கு ரூ.400 கோடி, ரூ.500 கோடி என நிதி கொடுத்துள்ளனர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருக்கிற முதலமைச்சர்களை மோடி அரசு மிரட்டுகிறது. மம்தா பானர்ஜி, பட்நாயக் எல்லாம் இருக்கிறார்கள்.
இந்த அயோக்கியத்தனத்தைத் தட்டி கேட்டால் உடனடியாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ வந்துவிடும் என்ற அச்சம். இதையெல்லாம் தாண்டி, எந்த தலைவரும் எடுக்காத ஆயுதத்தை 'பாசிசத்தை வீழ்த்துவோம், மோடியை வீட்டுக்கு அனுப்பவோம்' என்று சொல்லும் ஆற்றல் மற்றும் துணிச்சல் உள்ள ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டை காக்கின்ற பொறுப்பு இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய மகத்தான பொறுப்பை அவர் ஏற்றுள்ளார். எனவே, இந்த தொகுதியில் போட்டியிடும் எனக்கு 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'10 லட்சம் மக்களின் பட்டாசு தொழிலை நசுக்கியவர் மோடி' - அமைச்சர் தங்கம் தென்னரசு - LOK SABHA ELECTION