சென்னை:தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக கடந்த மே மாதம் ஹிஜிபுதாகிர் சர்வதேச தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் அமீர் உசேன் என்ற பொறியாளரும், அவரது தந்தை மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான், அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி உள்ளிட்ட 6 பேர் மீது UAPA சட்டத்தின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக, கைதான 6 பேரும் பல வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஹிஜிபுதாஹிர் அமைப்பின் மூலமாக உலகளாவிய காலிபெட் இஸ்லாமியக் கொள்கை முறையை ஷரியா சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வர முயன்றதாக சென்னை சைபர் கிரைம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சென்னையில் முதல்முறையாக சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ச்சியாக அவர்களிடம் விசாரித்த நிலையில், இவர்கள் ஹிஜிபுதாகிர் அமைப்பின் சிந்தனைகளை பரப்புவதை முக்கியமாக செய்து வருவது தெரிய வந்தது. மேலும், அமீர் உசேன் இது குறித்த பல்வேறு வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டுள்ளதை போலீசார் கண்டறிந்தனர்.
சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான பல்வேறு கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருவதாக போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், இந்த அமைப்பின் கொள்கைப்படி, ஜனநாயகத்தின் நம்பிக்கை இல்லாமல் காலிபெட் கொள்கை முறையில் மக்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர். காணொலிக் காட்சி மூலமாக கூட்டங்கள் நடத்துவதும், குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைத்து பூட்டப்பட்ட அறைக்குள் கூட்டங்களை நடத்தியதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.