கோயம்புத்தூர்:கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரர் கோயில் முன்பாக கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் காரை ஓட்டி வந்த ஜமிஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (NIA) அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பின்னணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்கள் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு விசாரணையானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் கடந்த மாதம் 21 ஆம் தேதி போத்தனூரைச் சேர்ந்த அபு ஹனிபா, செல்வபுரத்தைச் சேர்ந்த சரண் மாரியப்பன், ஜிஎம் நகரைச் சேர்ந்த பவாஸ் ரஹ்மான் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதனை அடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரும் சென்னை புழல் சிறையில் அடிக்கப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் மூவரையும் காவலில் எடுத்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தற்போது அவர்களை விசாரணைக்காக கோவை அழைத்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க:பாகிஸ்தான் சிறையில் வாடும் காசிமேடு மீனவர்கள்.. கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பங்கள்.. அரசுக்கு மீனவர் சங்கம் கோரிக்கை!
அதன்படி, கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை முகாம் அலுவலகத்துக்கு இன்று (நவ.11) காலை மூவரையும் அழைத்து வந்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவை, உக்கடம் மற்றும் ஆத்துபாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 3 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தியதாகவும், இவர்கள் ஜமேஷா முபினுக்கு எந்த வகையில் உதவினார்கள்? கார் குண்டு வெடிப்பு நிகழ்த்த என்ன மாதிரியான உதவிகள் செய்யப்பட்டது? இதற்கு பின்புலத்தில் இன்னும் யார் யார் உள்ளார்கள்? என்ற விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, வெடி மருந்துகள் எங்கிருந்து வாங்கப்பட்டது? இதற்கு யார் யார் உதவினார்கள்? என்பது குறித்தும் விசாரித்து வருவதாகவும், கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கும் மூன்று பேரையும் அழைத்துச் சென்று இன்னும் இரண்டு நாட்களுக்கு இவர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்