தூத்துக்குடி:நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, இன்று அதிகாலையிலேயே வீட்டின் முன்பு சுத்தம் செய்து கோலம் போட்டு கடவுளுக்கு படையல் வைத்து புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், அருகே வீட்டில் வசிப்பவர்களுக்கும் ஸ்வீட்ஸ் கொடுத்து அன்பை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தல தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகள் காலை முதல் மிகுந்த உற்சாகத்துடன் புத்தாடைகள் உடுத்தியும், புது தங்க நகைகள் அணிந்தபடியும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளியை கொண்டாடும் புதுமண தம்பதிகள் (Credit - ETV Bharat Tamil Nadu) அதாவது, புதிதாகத் திருமணமாகும் தம்பதிகள் தங்களது முதல் தீபாவளியை 'தலை தீபாவளியாக' கொண்டாடுவது வழக்கம். பெண் வீட்டார் தரப்பில் தனது மகள் மற்றும் மருமகன்களுக்கு தல தீபாவளி பரிசாக புத்தாடைகள், புது நகைகள் மற்றும் இனிப்பு பலகாரங்கள், பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்விப்பார்கள்.
இதையும் படிங்க:கடந்தாண்டை விட கூடுதலாக விற்பனையான சிவகாசி பட்டாசுகள்.. எத்தனை கோடி தெரியுமா?
இதுகுறித்து, தூத்துக்குடி திரவியபுரம் பகுதியில் வசித்து வரும் திருமணமான புதுத் தம்பதி ஆதிவிக்னேஷ் - சக்தி அர்ச்சனா கூறுகையில், "தீபாவளியை முன்னிட்டு அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, பின் கடவுளை வணங்கிவிட்டு சாப்பிட்ட பிறகு தற்போது வெடி வெடித்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் மிக சந்தோஷமாக புத்தாடை அணிந்து வெடி வெடித்து மகிழ்கிறார்கள்.
கடந்த ஆண்டு தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிப்படைந்தனர். இதனால் அந்த ஆண்டு யாராலும் தீபாவளியைக் கொண்டாட முடியாமல் போனது. அதேபோல், இந்த ஆண்டும் வெள்ள பாதிப்பு இருக்கக் கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொண்டோம். அனைவரும் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாட வேண்டும்" என்றனர்.
இதேபோல் திருநெல்வேலியைச் சேர்ந்த புதுமண தம்பதியினரும் தலை தீபாவளியைக் கொண்டாடினர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, "அனைத்து வருடமும் கொண்டாடும் தீபாவளியைப் போல் அல்லாமல் இந்த வருட தீபாவளி தங்களுக்கு புதுமையான அனுபவத்தைக் கொடுத்துள்ளது" என தெரிவித்தனர்.