சென்னை:பூந்தமல்லி, ராமானுஜர் தெருவில் தனியாருக்குச் சொந்தமான பெண்கள் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இதன் அருகிலேயே குப்பை கொட்டும் இடம் உள்ள நிலையில், அவ்விடத்தில் இருந்து பூனை அழுவது போன்ற சத்தம் கேட்டதை அடுத்து, பூனை குட்டி கத்துவதாக அங்கு வசிக்கும் மக்கள் நினைத்து உள்ளனர்.
இந்த நிலையில், இன்று (பிப்.16) சத்தம் அதிகமானதைத் தொடர்ந்து, யுவராணி என்ற பெண் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, பிறந்து சில நாட்களே குழந்தை ஒன்று, தொப்புள் கொடியுடன் துணி இல்லாமல் குப்பைத் தொட்டியில் எறும்புகள் உடலில் மொய்த்த நிலையில், அழுது கொண்டிருப்பதை கண்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த யுவராணி, உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று, அந்தப் பகுதி மக்களின் உதவியுடன், அந்த குழந்தையை மீட்டு, பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு, அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இதனிடையே, குப்பைத் தொட்டியில் குழந்தை கிடந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குழந்தையை வீசிச் சென்ற நபர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.