தேனி: உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, அனுமந்தன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (50). இவரது மகளான மலர் கொடியை அதே பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் என்ற வடிவேலு (26) என்பவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், லட்சுமி பூர்வீக சொத்தில், மகள் மலர் கொடிக்கு பங்கு கொடுக்காமல் விற்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருமகன் வடிவேலு கடந்த 2019 ஆம் ஆண்டு மாமியார் லட்சுமியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.
மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்த நிலையில், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணை முடிவுற்று சாட்சியங்களின் அடிப்படையில் வடிவேலு மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தது நிரூபிக்கப்பட்டதால், கொலை குற்றத்திற்காக குற்றவாளி வடிவேலுக்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும், அதைக் கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனையும் விதித்து தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி அனுராதா தீர்ப்பு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து குற்றவாளி வடிவேலுவை மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்