கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள வன்னியபுரம் பகுதியில் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில், சுமார் 5 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் அலகு-4ல் உள்ள BAND என அழைக்கப்படும் கெமிக்கல்ஸ் தயாரிக்கும் பிரிவில் சுத்திகரிப்பு பணியின்போது தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மளமளவென பரவிய தீ மற்றும் வான் உயர்ந்த புகை மூட்டம் காரணமாக தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.
புகைமூட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி மற்ற அலகுகளில் பணிபுரிந்த நைட் ஷிப்ட் ஊழியர்கள் 3000 பேர் உள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டனர். சிறிது நேரம் கழித்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் கூட சில ஊழியர்கள் மயக்கமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு ஒசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, மேட்டூர் அனல்மின் நிலையம், ஆனேக்கல் என 9 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமானது.
மேலும் கெமிக்கல் அலகில் பணியாற்றிய 11 பேர் வரை மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டு ஒசூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு நேரடியாக பார்வையிட்டு நலம் விசாரித்தார். இதையடுத்து அவர் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைக்கு நேரில் சென்று தீ அணைக்கும் பணியை ஆய்வு செய்தார்.
இந்நிலையில் தீ விபத்து காரணமாக இன்று டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு பணிகள் தொடர்ந்து 7 மணிநேரமாக நடந்து வருகிறது.
தொழிற்சாலை நிர்வாகம் விளக்கம்: தீ விபத்து தொடர்பாக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "ஓசூரில் உள்ள தங்களது உற்பத்தி ஆலையில் துரதிஷ்டவசமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உற்பத்தி ஆலையில் பின்பற்றப்படும் எங்கள் அவசரகால நெறிமுறைகள் எங்களது ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்திருக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் எங்கள் ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அக்கறையுடன் எடுத்துவருகிறோம்" என விளக்கம் அறிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்