சென்னை:சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு வாரத்தில் 3 நாட்கள், சென்னை-ஆப்பிரிக்கா இடையே வாரத்தில் 4 நாட்கள் விமான சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கோவா, ஜெய்பூர், புனே ஆகிய பெருநகரங்களுக்கு புதிதாக தினசரி விமான சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமும், வதோரா நகருக்கு வாரந்திர விமான சேவையை, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் தொடங்கியுள்ளது.
வெளிநாட்டு விமான சேவைகள்: தாய்லாந்து நாட்டின் கடற்கரைச் சுற்றுலா தளமான ஃபுகட் நகருக்கு சென்னையில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் நேரடி விமானத்தை தாய் ஏர் ஏசியா விமானம் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியா நாட்டுத் தலைநகர் அடீஸ் அபாபாவுக்கு, சென்னையில் இருந்து இதுவரையில் வாரத்தில் 3 நாட்கள் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த விமானத்திற்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பும், அதோடு பயணிகள் கூட்டமும் அதிகமாக இருப்பதால் இப்போது இந்த விமானம், வாரத்தில் 4 நாட்கள் சென்னையில் இருந்து அடிஸ் அபாபாவிற்கு இயக்கப்படுகிறது. விரைவில் இந்த விமானம் தினசரி விமானமாக இயக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.