சென்னை: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து மே 4ம் தேதி தேனியில் வைத்து அவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவர் மீது சென்னை, திருச்சி, தேனி ஆகிய இடங்களில் இதுவரை எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சவுக்கு சங்கர் மீது சென்னையில் மட்டும் மூன்று வழக்குகள் போடப்பட்டிருந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது பெண் காவலர்கள் பாதுகாப்போடு போலீஸ் வாகனத்தில் அவர் வருவது கவனம் பெற்றுள்ளது. அதேபோல, சவுக்கு சங்கர் தொடர்பான வழக்குகளில் கைதாகியிருக்கும் தனியார் யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி போலீசாரால் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போதும் அவருக்கு பெண் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த இரண்டு சம்பவங்களையும் கோடிட்டு காட்டும் நெட்டிசன்கள், '' பெண் காவலர்களை அவதூறாக பேசியதற்காகத்தான் இருவருக்கும் பெண் காவலர்களையே பாதுகாப்புக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்'' என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றுகூட சவுக்கு சங்கர், கோவை மத்திய சிறையில் இருந்து விசாரணைக்காக திருச்சி மகிளா உரிமையியல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது 100 பெண் போலீசாரும், 20 ஆயுதப்படை பெண் காவலர்களும் பாதுகாப்புக்கு வந்தனர்.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.சத்யராஜ் ராஜமாணிக்கத்திடம் ஈடிவி பாரத் தமிழ் சார்பில் பேசினோம். அப்போது அவர் கூறுகையில், ''இந்த நிகழ்வுகளை நாம் வேறுபடுத்தி பார்க்காமல் சமமாக பார்க்க வேண்டும். சவுக்கு சங்கர் மீது பெண்களை அவதூறாக பேசிய வழக்கு மட்டும் இல்லையே.. மேலும் சில வழக்குகளும் அவர் மீது பதியப்பட்டுள்ளன.. ஒரு கைதியை அழைத்து வருவதற்கு அப்பகுதியில் உள்ள காவலர்கள் அப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்..
மேலும், சவுக்கு சங்கர் பேசும்போது பதவி உயர்வுகளுக்காக பெண் காவலர்கள் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்று கூறியிருந்த நிலையில், எங்களுக்கும் (பெண் காவலர்களுக்கும்) பாலின வேறுபாடின்றி ஒரு கைதியை பாதுகாப்பாக அழைத்து வரும் அதிகாரமும், பொறுப்பும் உண்டு என்பதற்கு இதனை சான்றாக எடுத்துக்கொள்ளலாமே'' என்று அவர் கூறினார்.