சென்னை:சென்னை நெற்குன்றம் 145வது வார்டு என்.டி.பட்டேல் சாலையில் உள்ள ரூபாய் 100 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 14 செண்ட் அரசு நிலத்தை மீட்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த போரட்டத்தை 145 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் தலைமையில் ‘நெற்குன்றம் மண் நெற்குன்றம் மக்களுக்கே’ என்ற தலைப்பில் நடைபெற்றது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட திரளான மக்கள் பங்கேற்றனர். போராட்டத்தின்போது தனியார் வசமுள்ள அந்த இடத்தை மீட்டு அங்கு அரசு சார்பில் சமூக நலக்கூடமும், மகளிர் சுய தொழில் கட்டமும் கட்ட வேண்டும் என வலியுறுத்தப்படது.
அப்போது அங்கு வந்த போலீசார் இந்த இடத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கவுன்சிலர் சத்யநாதன் கூறுகையில், "1962ஆம் ஆண்டு நெற்குன்றம் பகுதியில் உள்ள 1.14 ஏக்கர் அரசு நிலத்தை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளனர்.
ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆசிரமம் கட்டுவதற்காக அந்த இடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக எந்தவித கட்டிடமும் கட்டப்படவில்லை. ஒருவேளை கட்டப்பட்டிருந்தால் குத்தகை முடிந்த பின்னர் இடத்தை மீட்கும் போது கட்டப்பட்ட கட்டிடத்திற்காக இழப்பீடு கொடுத்து இடத்தை மீட்டுக் கொள்ளலாம் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.