சென்னை: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
அதில், “தமிழ்நாட்டு மக்களுக்கான உரிமையைக் கேட்கிறோம். மாணவர்களுக்கு வரவேண்டிய கல்வித் தொகையான 2,150 கோடி ரூபாயை கேட்கிறோம். வருடா வருடம் கொடுக்கும் தொகையைத் தான் கேட்கிறோம். ஆனால், இம்முறை புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல், மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத் தான் இருந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாக சொல்லிவிட்டோம். இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது?
மொழிக்காக பல உயிர்களைக் கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. கல்வி என்பது தமிழர்களின் உரிமை. யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்,” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அண்ணாமலை குறித்த கேள்வி எழுப்பியதற்கு, அவரைப் பற்றி பேச விருப்பமில்லை என உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். மேலும், பல கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளிக்காமல் துணை முதலமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.
இதற்கு முன்னதாக, அதாவது நேற்றைய தினம் (பிப்ரவரி 20) தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே… புதிய கல்விக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ நிதி ஒதுக்கப்படும் என்பது எவ்விதத்தில் நியாயம்?
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லையா? இருவேறு திட்டங்களுக்கு முடிச்சுப் போட்டு கல்விக்கான நிதியை முடக்குவது அறமா? இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்!,” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிக்கை பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், இதுகுறித்து துணை முதலமைச்சர் செய்தியாளர்களிடத்தில் பதில் அளித்துள்ளார்.