ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில், சமீப காலமாக கடும் வெப்பம் காரணமாக வறட்சி நிலவியுள்ளது. இதனால் வனக்குட்டை, ஓடை, ஏரிகள் நீரின்றி வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில், கோடை வெயிலுக்கு இடையே தாளவாடி பகுதியில் கடந்த சில தினங்களாக காற்றுடன் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஏப்.20) இரு மாநில எல்லையான தாளவாடி பகுதியில் எரகனஹள்ளி, பனங்கள்ளி, சிக்கள்ளி, அண்ணாநகர், இக்கலூர், தொட்டகாஜனூர், திகினாரை, ஆசனூர், தலைமலை உள்ளிட்ட கிராமங்களில் திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால், அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. பலத்த காற்று காரணமாக பனங்கள்ளி, திகினாரை, இக்கலூரைச் சேர்ந்த ஆசிப், வரதராஜ், சித்தராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேந்திரம் வாழைகள் காற்றின் வேகம் தாங்காமல் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.
இதன் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் எனக் கணக்கிடப்படுகிறது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், வாழை சேதத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தேர்தல் ஆணையத்துக்கு மாணிக்கம் தாகூர் வைத்த முக்கிய வேண்டுகோள்! - Lok Sabha Election