திருநெல்வேலி:பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் நெல்லையில் பருவநிலை மாற்றம் குறித்த ஒருநாள் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இந்த பயிலரங்கை தொடங்கி வைத்து ஆட்சியர் கார்த்திகேயன் பேசுகையில், "பருவநிலை மாற்றம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் நமது நெல்லை மாவட்டமும் ஒன்று, பெருமழை வெள்ளம் ஏற்பட்டு 7 நாட்களுக்கு மேலாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
பருவநிலை மாற்றம் காரணமாக மழை, வெள்ளம் என பேரிடர்களும் புதிது புதிதாக மாற்றம் அடைந்து அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக நெல்லை மாவட்டத்தில் 1992-ம் ஆண்டு ஏற்பட்ட பேரிடரின் போது மலைப் பகுதியில் மட்டும் மழை பெய்தது, புயல் காற்று வீசியது சமவெளியில் மழை இல்லை.
2021-ம் ஆண்டு பெரிய பாதிப்பு இல்லை. 2023-ம் ஆண்டு ஏற்பட்ட பேரிடரில் மலைப்பகுதி, சமவெளிப்பகுதி, கடல் முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் மழை பெய்தது. 80 சென்டி மீட்டர் வரை மழை பெய்தது. இதுபோன்று ஆண்டுதோறும் பேரிடர்களும் கணிக்க முடியாத அளவில் மாற்றம் பெற்று வருகிறது.
நமது மாவட்டம் 90 சென்டிமீட்டர் மழை வரை சந்தித்து உள்ளது. இனி வருங்காலத்தில் இயற்கை பேரிடர்கள் எப்படி இருக்கும் அதை எதிர்கொள்வது எப்படி, கரையோரப் பகுதிகளை எப்படி பாதுகாப்பது, நமது மாவட்டம் ஐந்திணைகளை ஒருங்கே பெற்ற மாவட்டம் ஐந்திணைகளையும், நீர் நிலைகளையும் பாதுகாக்கும் பொறுப்பும் நமக்கு உள்ளது. இவை குறித்தும் எதிர்காலத்தில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வது குறித்தும் பெருந்திட்டம் தயாரிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள நம்மை தயார் படுத்திக்கொள்வது குறித்து பேசினர். இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் தாக்ரேசுபம் ஞானதேவராவ் மாவட்ட வன அதிகாரி முருகன், உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:வண்டலூர் பூங்காவில் 2 அனுமன் குரங்குகள் தப்பியோட்டம்.. மன உளைச்சலில் பெண் ஊழியர் உயிரிழப்பு