திருநெல்வேலி: கேரளா மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலி மாவட்டம் கொண்டா நகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், சீதபற்பநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், மேலத்திடியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் என பல இடங்களில் கொட்டப்பட்டது. இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்ட பசுமை தீர்ப்பாயம் மூன்று தினங்களுக்குள் கழிவுகள் அள்ளப்பட்டு கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, சுத்தமல்லி காவல் நிலையத்தில் மூன்று வழக்குகளும், முக்கூடல், சீதபரப்பநல்லூர், முன்னீர்பள்ளம் காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கும் என மொத்தமாக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கேரள மாநிலத்தை சார்ந்த ஒருவர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த நிலையில், திருநெல்வேலிக்கு கேரளா அதிகாரிகள் வந்து குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். குப்பைகளை முழுமையாக அள்ளி கேரளா கொண்டு செல்ல கேரளா அரசு முடிவு செய்து, திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் தலைமையில் 30கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவை அனுப்பி வைத்தனர். அவர்கள் 16 லாரிகளுடன் திருநெல்வேலி வந்து சேர்ந்து குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் இருந்து ஜேசிபி எந்திரம் மூலம் குப்பைகளை லாரிகளில் சேகரித்தனர்.
கேரளா செல்லும் வழியில் குப்பைகள் கீழே கொட்ட படக்கூடாது என்பதற்காக தார்ப்பாய்கள் சுற்றி கட்டப்பட்டது. குப்பைகள் அள்ளும் பணி இன்று இரவு முடியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து லாரிகளும் திருநெல்வேலியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கேரள மாநிலம் கொல்லம் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அவை தரம் பிரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்படும் என குப்பைகள் அள்ளுவதை ஆய்வு செய்த கேரளா ஐஏஎஸ் அதிகாரி சாக்சி தெரிவித்தார். மேலும், குப்பைகள் அள்ளுவதை திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த உதவி ஆட்சியர் அர்பித் ஜெயின், பயிற்சி ஆட்சியர் அம்பிகா ஜெயின் ஆகியோர் நேரில் கண்காணித்தனர். மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் குப்பை அள்ளும் இடங்களுக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
பின்னர் அவர் கொண்ட நகரம் ஊராட்சி பகுதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது; பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப் படியும், தமிழக அரசின் கண்காணிப்பில் கேரளாவில் இருந்து வந்துள்ள பணியாளர்கள் குப்பைகள் அள்ளும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை 16 வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் வாகனங்கள் கொண்டுவரப்பட்டு இன்று இரவிற்குள் குப்பை அள்ளும் பணி முடிவடையும். எவ்வளவு குப்பைகள் எத்தனை வண்டிகளில் செல்கிறது என்பது குறித்து வீடியோ ஆதாரங்களுடன் விரிவான அறிக்கை பசுமை தீர்ப்பாயத்திடம் சமர்ப்பிக்கப்படும். தமிழக எல்லை வரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குப்பைகள் கொண்டு செல்லும் லாரிகள் அனுப்பி வைக்கப்படும். கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு குப்பைகள் கொண்டு செல்லப்படுகிறது. குப்பைகள் அள்ளப்பட்ட இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த இடங்கள் தூய்மைப்படுத்தப்படும். திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மீண்டும் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க, கேரள எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள 18 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்படும்'' என்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக கேரள மாநிலத்தில் இருந்து இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள் திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்ட நிலையில், கழிவுகள் மீண்டும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்படுவது இதுவே முதல் முறை என்ற நிலையில் இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.