சென்னை:உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “செவிலியர்களின் முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேள் அம்மையாரின் பிறந்தநாளான ஒவ்வொரு மே 12ஆம் தேதியும் சர்வதேச செவிலியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டிற்கான கருப்பொருளாக, செவிலியர்கள் தினத்தைப் பொறுத்தவரை ‘Our Nurses Our Future – The Economic Power of Care’ எனும் நோக்கத்தோடு செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நம்முடைய ‘தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின்’ நிர்வாகிகள் நம்மைச் சந்தித்து, குறிப்பாக தி.மு.க. அரசு பொறுப்பேற்றதையடுத்து, செவிலியர்களுக்காக தொடர்ந்து தொண்டாற்றி வருகிற முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிற வகையில், தங்களுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. 90 சதவிகிதத்திற்கும் மேலான கோரிக்கைகள் முழுமை பெற்றுள்ளது. தி.மு.க அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு ஆயிரத்து 412 ஒப்பந்த செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். ஏற்கெனவே ஒப்பந்த செவிலியர்களாக இருந்தவர்களுக்கு ரூ.16 ஆயிரமாக சம்பளம் வழங்கப்பட்டிருந்தது. அது ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
அது மட்டுமல்லாது, ஒப்பந்த செவிலியர்களாக மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல ஆண்டு காலமாக பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருந்தனர். தி.மு.க. அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு ஆயிரத்து 912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
‘மக்களைத்தேடி மருத்துவம்’ என்ற ஓர் மகத்தானத் திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிறகு பெண் சுகாதார தன்னார்வலர்கள் 10 ஆயிரத்து 969 பேர் நியமிக்கப்பட்டார்கள். நியமிக்கப்பட்டதற்குப் பிறகு பகுதி நேரப் பணியாளர்கள் என்ற வகையில் அவர்களுக்கு சம்பளம், சம்பளம் என்று சொல்வதைக் காட்டிலும் ஊக்கத் தொகை உயர்த்தப்பட்டு, ரூ.5 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.