தேசிய பட்டியல் இன ஆணைய இயக்குனர் ரவிவர்மன் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் மாநிலம் முழுவதும் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், தேசிய பட்டியல் இன ஆணைய இயக்குனர் ரவிவர்மன், வேங்கைவயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரனையில், சம்பவம் நடைபெற்றபோது என்ன நடந்தது, காவல்துறை விசாரணை எவ்வாறு நடைபெற்று வருகிறது, தங்களுடைய கோரிக்கைகள் என்ன என்று மக்களிடம் கேட்டறிந்தார். விசாரனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். ஆணையம் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிக்கையை ஆணையத் தலைவருக்கு சமர்ப்பிக்கும். இறுதியில், ஆணையத் தலைவரே இது குறித்து முடிவெடுப்பார்.
சிபிசிஐடி போலீசார் மனிதக் கழிவுகள் கலந்த நீரை சாம்பிள் எடுத்த விதம் தவறு. இதே போன்று டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுத்ததும் தவறு. உண்மைக் கண்டறியும் சோதனை மட்டுமே இதற்கு தீர்வாகும். சிபிசிஐடி போலீசார் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமே குறிவைத்து, இந்த விசாரணையானது நடைபெற்று வருவதாக ஆணையம் கருதுகிறது. தமிழகத்தில் தொடர்ந்து பட்டியல் இன அனைத்து தரப்பு மக்கள் மீது தாக்குதல் என்பது நடைபெற்று வருகிறது.
தற்போது நிகழ்ந்துள்ள புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே, இது போன்ற செயல்களைத் தடுக்க முடியும். வழக்குப் பதிவு செய்வதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் போராட வேண்டிய நிலை உள்ளது. முரசொலி அறக்கட்டளை நிலம் தொடர்பாக ஆணைய தலைமைதான் விசாரணையை நடத்த முடியும். இது குறித்து எப்போது விசாரணை நடக்கும் என்ற கருத்தையும், அவர்கள்தான் முடிவு செய்ய முடியும். வேங்கைவயல் தொடர்பான எனது அறிக்கையை மூன்று நாட்களில் ஆணையத் தலைவரிடம் சமர்ப்பிப்பேன்.
பாதிக்கப்பட்ட மக்கள், ஒரு சில நபர்கள் மீது புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர்கள் மீது சிபிசிஐடி போலீசார் இதுவரை எந்த விசாரணையும் நடத்தவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். சம்பவம் நடைபெற்றபோது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த நீரை மாதிரி பரிசோதனைக்கு எடுத்ததாக கூறுகின்றனர். ஆனால், அதிகளவு நீரில் கழிவு கலந்ததால் சோதனை முடிவு சரியாக இருக்காது. எனவே, அவ்வாறு செய்தது தவறு. பாதிக்கப்பட்ட மக்களிடமே டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்தப் பகுதி மக்கள் ஆணையத்திடம் தெரிவித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு தொடர்பாகவும், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கையும் நீதிமன்றத்தில் இருந்து கேட்டு பெறப்படும். இந்த விவகாரம் தொடர்பாக, தலைமைச் செயலாளர் தொடர்ந்து தேசிய பட்டியலின ஆணையத்திடம் அறிக்கையாக அளித்துக் கொண்டிருந்தார். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
இதையும் படிங்க:இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் போட்டி; ஓபிஎஸ் பேச்சால் சின்னம் முடங்கும் அபாயம்.. அதிமுகவில் நடப்பது என்ன?