கோயம்புத்தூர்:கோவை அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொ.ம.தே.க) கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று சனிகிழமை (நவ.23) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன், “அரசியல் களத்தை இன்று திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல், ஆன்மீக அரசியல் என பிரித்து கூறிகின்றனர். அந்த வகையில்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அரசியல் ஆக்கப்பூர்வமான அரசியல். அனைத்து திட்டங்களையும் மக்களை சென்று சேர வைப்பது தான் இந்த ஆக்கப்பூர்வமான அரசியல். மக்களுக்கு வேண்டிய சேவைகளை செய்து கொடுப்பதுதான் நேர்மையான அரசியல். தமிழக அரசு, பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க தயங்க கூடாது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவர்கள் கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும். அதேபோல் சொத்தவரியால் பொதுமக்கள் பெரிதளவு பாதிக்கப்படுகிறார்கள். அதை அரசு குறைக்க வேண்டும். கோவை மாநகராட்சி மிகப்பெரிதாக விரிவடைந்து கொண்டிருப்பதால் அதை இரண்டாக பிரிக்க வேண்டும்.
ஆனைமலை - நல்லாறு திட்டத்தை கேரள அரசுடன் பேசி, விரைந்து அமல்படுத்த வேண்டும். இன்று நயன்தாராவுக்கும் - தனுஷுக்கும் அல்லது ஏ.ஆர்.ரகுமானுக்கும் அவரது மனைவிக்கும் நடக்கும் சண்டை தான் பெரிய பிரச்சனையா? அவர்களது பிஸ்னஸூக்காக நயன்தாராவும் - தனுஷும் சண்டை போட்டுக்கொள்கிறார். ஆனால் நாம் அதை தேவையில்லாமல் விவாதித்து கொண்டு இருக்கிறோம். ஒரு தூய்மையான அரசியல் எங்களிடம் உள்ளது” என்றார்.