தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நீர்த்துளிகளால் உடைக்கப்படும் இயற்கை தாதுக்கள் நானோ துகள்களை உருவாக்கும்" - சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு! - IIT Madras

IIT Chennai Discover Nano Particles: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், நீர்த்துளிகளால் உடைக்கப்படும் இயற்கை தாதுக்கள் நானோ துகள்களை உருவாக்குவதாக கண்டறிந்துள்ளனர். மேலும் சயின்ஸ் இதழில் வெளியிடப்படும் சென்னை ஐஐடியின் முதலாவது ஆய்வுக் கட்டுரை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Madras IIT Nano Technology Lab
Madras IIT Nano Technology Lab (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 4:52 PM IST

சென்னை:சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், நீர்த்துளிகளால் உடைக்கப்படும் இயற்கை தாதுக்கள் நானோ துகள்களை உருவாக்குவதாகக் கண்டறிந்துள்ளனர். சயின்ஸ் இதழில் வெளியிடப்படும் சென்னை ஐஐடியின் முதலாவது ஆய்வுக் கட்டுரை இதுவாகும்.

மேகங்கள், மூடுபனி போன்ற வளிமண்டல நீர்த்துளிகளில் உள்ள அயனி இனங்கள் மற்றும் தொடர்பு மின் மயமாக்கல் மூலம் சார்ஜ் செய்யப்படலாம். தாதுக்களின் சிதைவு புதிய மூலக்கூறுகளை உருவாக்கி புதிய மேற்பரப்புகளை உருவாக்குகிறது. அத்தகைய மேற்பரப்புகளில் பல்வேறு வகையான வினையூக்கங்களும் ஏற்படக்கூடும். இந்த செயல்முறைகள் உயிர்வழித் தோற்றத்தில் முக்கியமானதாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

பூமியில் விழக்கூடிய நானோ துகள்கள், மூலக்கூறுகளால் ஆன நுண்ணிய நீர்த்துளிகள் விழுதல் (microdroplet showers) என்பது கிரகத்தின் வேதியியல் மற்றும் உயிரியல் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த கண்டுபிடிப்புகள் 31 மே 2024ஆம் தேதி சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. (DOI: 10.1126/science.adl3364)

இந்த ஆராய்ச்சி குறித்து சென்னை ஐஐடி வேதியியல் துறையின் நிறுவனப் பேராசிரியர் தாளப்பில் பிரதீப் கூறும்போது, “நுண்துளிகள் ரசாயன எதிர்வினைகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதும், அதன் விளைவாக புதிய ரசாயனப் பிணைப்புகள் உருவாவதும் நாம் அறிந்ததுதான். மைக்ரோ துளிகளால் இரசாயன பிணைப்புகளை உடைக்க முடியும் என்று எங்கள் எண்ணத்தில் தோன்றியதன் விளைவுதான் இந்த கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. பாறைகளை இயற்கையான சிறுதுகள்களாக்கி மணலாக மாற்றுவது இயற்கையாக நடைபெறுகிறது. வெளிப்படையாகக் கூறினால், மண்ணுக்கு மணலை உருவாக்குவதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளோம். எதிர்காலத்தில் போதிய வளங்களுடன் பாலைவனங்களிலும் பசுமையாக்க முடியும்” என்றார்.

இது குறித்து சென்னை ஐஐடி பிஎச்டி ஆராய்ச்சி ஆசிரியரான ஸ்பூர்த்தி கூறும்போது, "மணல் எப்படி உருவானது என்பதை விளக்கும் பல நூற்றாண்டு கால உருமாறும் நுட்பத்தை சில நொடிகளில் இந்த கண்டுபிடிப்பு நமக்கு வழங்கிவிடுகிறது. சுற்றுச்சூழல் நன்மைகளைத் தாண்டி நானோ தொழில்நுட்பம் மற்றும் பொருள் அறிவியலை இந்த முறை மேம்படுத்தியுள்ளது. இதன்மூலம் பரந்த தொழில்துறை பயன்பாடுகளுடன் நிலையான மற்றும் திறமையான நானோ துகள்கள் உற்பத்தியைச் செயல்படுத்துவது சாத்தியமாகி உள்ளது" எனத் தெரிவித்தார்.

சோதனையில், ஆற்றுமணல், மாணிக்கம், அலுமினா போன்ற கனிமங்களின் துண்டுகள், மிகவும் கடினமான தாதுக்கள், சிறிய மின்னூட்டப்பட்ட நீர்த்திவலைகளால் இணைக்கப்பட்டதும், மில்லி விநாடி நேரத்தில் நானோ துகள்களை உருவாக்குவதற்குத் தானாக உடைந்து போவதை அவர்கள் கண்டறிந்தனர்.

அவர்கள் உருவாக்கிய நானோ துகள்களைச் சேகரித்து நவீன முறைகளைப் பயன்படுத்தி வகைப்படுத்தினர். கணினி உருவகப்படுத்துதலில் இந்நிகழ்வு புரோட்டானால் தூண்டப்பட்ட ஸ்லிப் எனப்படும் செயல்முறையால் ஏற்படக்கூடும் என கூறப்பட்டது. தாதுக்களில்ர உள்ள அணு அடுக்குகள் ஒன்றையொன்று புரோட்டான்கள் உதவியுடன் நழுவுகின்றன. சிறிய நீர்த்துளிகளில் புரோட்டான்களும் பிற வினையூக்கிகளும் இருப்பதாக அறியப்படுகிறது.

வளிமண்டலத்தில் சார்ஜ் செய்யப்பட்ட ஏரோசோல்களின் பரவலைக் கருத்தில் கொண்டு, மண் உருவாவதற்கு முக்கியமானதாக இருக்கலாம். பாறைகள் உடைந்து மண் உருவாக்கும் வகையில் பல காரணிகளை உள்ளடக்கிய செயல்முறையாகும். ஒரு சென்டிமீட்டர் மணலைப்பெறப் பெற 200-400 ஆண்டுகள் ஆகும், சிலிக்கா போன்ற கனிமங்களின் நானோ துகள்கள் அரிசி, கோதுமை போன்ற பயிர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

இதையும் படிங்க:"கடிகாரத்தின் துல்லியத்தை போல் வாக்கு எண்ணிக்கை செயல்முறை"- தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details