சேலம்:சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள குப்பனூரில் குமரகிரி கோசாலை இயங்கி வருகிறது. இங்கு காங்கேயம் மாடுகள், காரி, செந்தூரா உள்ளிட்ட 10 வகையான மாடுகளும் ஆலம்பாடி, திருஞ்சல், தொண்டைகுட்டை, புலிகுளம், மலை மறை மாடுகள், உம்பளாச்சேரி, மதுரை குட்டை, சர்க்கரை குட்டை உள்ளிட்ட 48 வகையான நாட்டு மாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இங்கு ஜல்லிக்கட்டு காளைகள், நாட்டு சேவல்கள், ஆடுகள், புறாக்கள், நாய்கள் என நூற்றுக்கணக்கான கால்நடைகள் இந்த கோசாலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 'வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு' என்ற இலக்கை மையப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாட்டு பொங்கலான நேற்று (ஜன.15) இந்த கோசாலையில் மாட்டுப் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு, மஞ்சள், குங்கும்ம் வைத்து அலங்கரிக்கப்பட்டது. மற்ற கால்நடைகளும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் முன்பு காட்சிப்படுத்தப்பட்டன. பின், அனைத்து கால்நடைகளுக்கும் சிறப்பு தீவனங்கள் வழங்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.