சென்னை:இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதா, பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு இளநிலை நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA - National Testing Agency) நடத்தி வருகிறது. இந்த தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் கல்வியாண்டிற்கான தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பதிவு மேற்கொள்ள கடந்த பிப்.9ஆம் தேதி முதல் மார்ச் 16 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் 23 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த நிலையில், நீட் தேர்விற்கான விண்ணப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள மறுவாய்ப்பு கேட்டு கோரிக்கைகள் வந்துள்ளது.