திருநெல்வேலி:நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மண்டல வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் விவசாயிகள், மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து வருகின்றனர்.
அந்த வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்ளடக்கிய மண்டல கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (பிப்.8) நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சர்களான ஜெயக்குமார், வளர்மதி உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது "ஓ.பன்னீர்செல்வத்தை எந்த தொண்டரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகத்தில் மக்கள் மனதில் எப்போது நினைத்திருக்கும் ஒரே கட்சி அதிமுக தான் அது மீண்டும் ஆட்சிக்கு வரும். அதிமுகவில் இருந்து பாஜகவில் சேர்க்கிறேன் என்ற பெயரில் 17 பேரைத் தேடிப் பிடித்து, அவர்களை பாஜகவில் இணைத்து இருக்கிறார்கள்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருந்து அதிமுக வந்தவர்களை பாஜகவில் இணைத்து இருக்கிறார்கள்.பாஜகவில் இணைந்த 17 பேரை வைத்து ஒரு மாயை உருவாக்க நினைகிறார். அவர்களை வைத்து அண்ணாமலை ஆளுநரை சந்திப்பார். ஆளுநர் ரவியிடம் 17 பேரை வைத்து ஆட்சி அமைக்க மனு கொடுப்பார் அப்படித்தான் அண்ணாமலை ஆட்சி அமைக்க முடியும்.