கடலூர்: ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர், கடலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து பாத்திரங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஒரு வார காலமாக கடலூரில் தங்கி பாத்திர விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள சினிமா தியேட்டரில் நடிகர் சூரி நடித்த கருடன் படம் பார்ப்பதற்காக 30 பேர் சென்றுள்ளனர்.
நரிக்குறவர் மக்கள் படம் பார்க்க மறுக்கப்பட்டது தொடர்பான வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu) திரைப்படம் பார்ப்பதற்கு வந்தவர்களுக்கு திரையரங்க நிர்வாகம் டிக்கெட் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. டிக்கெட் வழங்குவார்கள் என காத்திருந்த அவர்கள் நிர்வாகத்திடம் கேட்ட போது, டிக்கெட் வழங்க முடியாது என கூறிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சினிமா பார்க்க வந்த நரிக்குறவர்கள் அனைவரும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு சென்று முறையிட்டுள்ளனர். அங்கு இருந்த காவலர்கள் இந்த விவகாரம் குறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க அவர்களை அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால், அவர்கள் நீண்ட நேரம் மனு அளிக்க காத்திருந்த நிலையில், பின்னர் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில், வட்டாட்சியர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கடலூர் வட்டாட்சியர் பலராமன் சம்பவ இடத்திற்கு வந்து, அம்மக்களிடம் பேசிய பின்னர், அவர்கள் அனைவரையும் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று அம்மக்கள் அனைவருக்கும் டிக்கெட் வாங்கி கொடுத்து படம் பார்க்க அனுப்பி வைத்தார். கடலூரில் நரிக்குறவர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கடலூர் இளைஞர் சென்னை விமான நிலையத்தில் மாயம்.. தந்தை அளித்த பரபரப்பு புகார்! - Youth Missing At Chennai Airport