சென்னை:சென்னை தாழம்பூர் பகுதியில் காஸா கிராண்ட் நிறுவனம் கட்டிய குடியிருப்பில் வீடு வாங்கியவர்களுக்கு முறையான ஆவணங்கள் வழங்கப்படவில்லை எனவும், அந்த குடியிருப்பு கட்டப்பட்டிருக்கும் நிலம் அனாதீன நிலம் எனவும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது X பதிவில், “காஸா கிராண்ட் (Casa Grande) கட்டுமான நிறுவனம் சென்னை நாவலூர் அருகே உள்ள தாழம்பூரில் கட்டிய அடுக்கு மாடி குடியிருப்பில் பல லட்சங்களை முதலீடு செய்து வீடு வாங்கிய 500க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு இதுவரை முறையான சொத்து ஆவணங்களை அந்நிறுவனம் வழங்கவில்லை என்றும், பட்டா பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுகிறது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
கடந்த நான்கு வருடங்களாகவே 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவும் ஒரு செய்தி என்று கடந்து போய் விட முடியாது. இந்த நிலம் குறித்த வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
1. உரிய ஆவணங்கள், பட்டா இல்லாமல் எப்படி பத்திரப்பதிவு செய்தார்கள் என்ற கேள்வி உடனடியாக எழுகிறது.
2. 500 வீட்டின் சொந்தக்காரர்கள் எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்வதற்கு ஒப்பு கொண்டார்கள்?
3. அதே போல், பெரும்பாலோனோர் (குறைந்தது 90%), வங்கிகளின் மூலம் கடன் பெற்றுத்தான் வீடுகளை வாங்கியிருப்பார்கள் ? அப்படியானால், வங்கிகள் எப்படி குறைபாடுள்ள ஆவனங்களை சட்ட ரீதியாக பதிவு செய்ய, கடன் வழங்க அனுமதித்தார்கள்? எந்த வங்கி அல்லது வங்கிகள் கடன் கொடுத்துள்ளன?
4. இந்த குடியிருப்பு அமைந்திருக்கும் ஒரு பகுதி நிலம், அனாதீன நிலம் (அரசாங்கம் கையகப்படுத்தியிருக்கும் உரிமையற்ற நிலம்), தனி நபர் உரிமை கொண்டாட முடியாது என்று அரசு குறிப்பிட்டிருக்கும் நிலையில், இந்த நிலத்தை எப்படி பதிவு செய்தார்கள்? யார் இதற்கு துணை புரிந்தது என்பது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
5. பத்திர பதிவு அலுவலகம் அனாதீன நிலத்தில் பல்வேறு குடியிருப்புகளை பதிவு செய்தது எப்படி? அனாதீன நிலம் என்று தெரிந்தும் அந்த தனியார் நிறுவனம் மக்களிடம் பணம் பெற்று பதிவு செய்தது எப்படி?
6. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு ஆவணத்தையும் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்க்க வேண்டிய வங்கிகள் முறை தவறி, சட்ட விரோதமாக கடன் கொடுத்தது ஏன்? யார்?
7. கடந்த நான்கு வருடங்களாக குடியிருப்பு வாசிகள் புகார் அளித்தும் மாநகர காவல் துறை நடவடிக்கை எடுக்காதது என்?