சென்னை: "ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நடிகர் விஜய் பல நல்லது செய்கிறார்" என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சக மாணவர்களால் சாதிவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர் சின்னதுரை, நடிகர் விஜயின் கல்வி விருது விழாவில் கலந்து கொண்டு, பரிசினை பெற்ற மகிழ்ச்சியை ஈடிவி பாரத் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில் இரண்டாவது ஆண்டாக கல்வி விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்குவதற்கு முன்பாகவே, கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டு விழா நடத்தினார்.
நடிகராக வலம் வந்த விஜய், மாணவர்களுக்கு உதவி செய்வது எனபது அவரது அரசியல் பாதைக்கு வழிவகுப்பதாக அப்போதே பலரால் பேசபட்ட நிலையில், இன்று அரசியல் கட்சித் தலைவராக, தனது முதல் மேடையை மாணவர்கள் மத்தியில் இருந்து தொடங்கியுள்ளது எதிர்பார்ப்புகளை எகிறச் செய்தது. இன்று நடைபெற்ற விழாவின் போது, விஜய் அரங்கத்திற்குள் நுழைந்து, மேடை ஏறி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வணக்கம் சொல்லி அனைவரையும் வரவேற்றார்.
பின், மேடையில் இருந்து இறங்கிய விஜய் மாணவர்கள் மத்தியில் அமர்ந்தார். கடந்த முறை மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் அமர்ந்தது பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில், இம்முறை விஜய் பக்கத்தில் யார் அமர்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை அமர்ந்திருந்தார்.
தடைகளை தாண்டி வந்த பாதை:கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சின்னதுரை தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, சின்னதுரை பயிலும் அதே பள்ளியில் படிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த சக மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்டார். இதனை தடுக்க முயன்ற சின்னதுரையின் தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக, வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார் சின்னத்துரை.
அவரது குடும்பமும் அரசு உதவியுடன் பாளையங்கோட்டைக்கு மாறிய நிலையில், அங்கே தனது படிப்பை தொடர்ந்து வந்தார். மருத்துவமனையிலிருந்தே காலாண்டுத் தேர்வை எழுதிய சின்னதுரைக்கு, சிகிச்சை ஒருபக்கம் நடந்தாலும் தேர்வுக்கு தயாராகி வந்தார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஸ்கிரைபர் எனப்படும் உதவியாளர் மூலம் தேர்வெழுதிய சின்னதுரை, 600க்கு 469 மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைந்தார்.
அப்போது, "எனக்கு என்ன தெரியுதோ, நான் என்ன சொல்லுதனோ அத மட்டும் எழுதுங்க. உங்களுக்கு பதில் தெரிஞ்சா நீங்களே எழுதிடாதீங்க" என தேர்வு எழுத உதவிய ஸ்கிரைபரிடம் சொன்னதாக ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சின்னதுரை தெரிவித்திருந்தார். இந்நிலையில், சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேல் பள்ளிக்குச் செல்லாமல் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த சின்னதுரைக்கு நடிகர் விஜயின் கல்வி விருது வழங்கும் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
முதலமைச்சர் ஆவதற்கு முன்பே கல்விக்கு முக்கியத்துவம்: தனது தாய், தங்கையுடன் வந்திருந்த சின்னதுரைக்கு சான்றிதழ் வழங்கி தவெக தலைவர் விஜய் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து, ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய சின்னதுரை, "நிறைய நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள், ஆனால் நடிகர் விஜய் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என அமைப்பை நடத்துகிறார். முதலமைச்சர் ஆவதற்கு முன்பே கல்விக்கு முக்கியத்துவம் கொடுகிறார்.
விஜய் 2026ல் முதலமைச்சராக பதவியேற்றால் இதை விட அதிகமாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என நம்புகிறேன். எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது செல்போனில் பேச முடியாத நிலை ஏற்பட்டது. இப்போது இருக்கும் அரசாங்கம் இன்னும் அதிகமாக நடவடிக்கை எடுத்தால் போதைப்பொருட்களை முற்றிலுமாக அகற்றலாம். இவ்வளவு பெரிய நடிகர் மாணவர்கள் மத்தியில் பேசுவது மகிழ்ச்சியாக இருந்தது. அவரது பிகில் படம் பிடிக்கும்" என தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
"எங்க ஊருக்கு நல்லது செய்யனும். சின்னதுரை கலெக்டராகி சொந்த மாவட்டத்திற்குச் செல்ல வேண்டும்" என சின்னதுரையின் தாய் தெரிவித்தார். மேலும், நன்றாக படி, உதவி செய்கிறேன். உங்க ஊருக்கு கலெக்டராக போ என விஜய் கூறினார் எனவும், மருத்துவர், ஆசிரியர் அவர்களுக்கு தான் நன்றி சொல்லனும். படிப்புச் செலவுகளை பார்த்துக்கொள்வதாக விஜய் கூறினார் என விஜய் தன்னிடம் பேசியதை பகிர்ந்துகொண்டார் சின்னதுரையின் தாய்.
இதையும் படிங்க: கல்வி விருது விழாவில் விஜய் பேசிய அரசியல் என்ன? - Vijay education award event