கோயம்புத்தூர் மோடி பொதுக்கூட்டத்தில் நமீதாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதம் கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் அருகே பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இரு நாட்களாக கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரான நமீதா கோவையில் முகாமிட்டிருந்தார். இந்நிலையில், இன்று பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்த அவரிடம் பாஸ் இல்லாததால், விவிஐபி நுழைவு வழியாக செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் செல்லும் வழிக்கு நமீதா சென்றார். அங்கிருந்த போலீசார் அவரை விவிஐபி நுழைவு கேட் வழியாக செல்லுமாறு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நமீதா மீண்டும் விவிஐபி கேட் நுழைவுப் பகுதிக்கு வந்த நிலையில், அவரிடம் மீண்டும் பாஸ் இல்லை என காவல் துறையினர் அனுமதிக்க மறுத்தனர்.
அப்போது அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட நமீதா, ஆத்திரமுற்று விவிஐபி கேட் முன்பாக நின்று, அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு நிர்வாகிகள் பாஸ் வழங்கியதை அடுத்து, காவல்துறையினர் விவிஐபி கேட் வழியாக நமீதாவை பொதுக்கூட்ட அரங்கிற்குச் செல்ல அனுமதித்தனர். முன்னதாக, விவிஐபி பாஸ் கிடைக்காமல் நடிகை நமீதா அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட நிலையில், அவரை பாஜக தொண்டர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
இதையும் படிங்க:"அம்மா ஜெயலலிதா; மணல் விற்பனையில் ரூ.4 ஆயிரம் கோடி" - வேலூர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது என்ன? - Lok Sabha Election 2024