சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கும் நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தியை வேட்பாளராக அறிவித்திருந்தனர். இந்த நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சி சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் சாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பேசி இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டன.
அதில், தன் சமூகத்தை சேர்ந்த பெண்கள், பிற சமூகத்தை சேர்ந்த ஆண்களை காதலித்தால் அதனை தடுக்க ஆணவக் கொலை செய்ய, அக்கட்சியின் தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் அவர்களை கருவிலே வேரறுப்போம் என்று வன்மத்தை தூண்டும் வகையில் பேசியிருந்தார்.
சூரியமூர்த்தியின் கருத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், அவர் மீது ஈரோடு நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், கடந்து 2021ஆம் சூர்யமூர்த்தி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கில் இருந்து அவரை விடுவித்தது.
இந்த நிலையில், நாமக்கல் நாடாளுமன்ற மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சூரியமூர்த்தியை மாற்றம் செய்யப்படுவதாகவும், அவருக்கு பதிலாக மாதேஸ்வரன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் வேட்பாளராக அறிமுகப்பட்டிருந்த சூரியமூர்த்தி, கடந்த 1992ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டுள்ளார். மேலும், தற்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் இளைஞரணி செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் இளங்கலை வரலாறு பட்டப்படிப்பை முடித்துள்ளார். மேலும், மூன்று முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
கடந்த 2001ஆம் ஆண்டு மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியிலும், 2006ஆம் ஆண்டு வெள்ளக்கோவில் சட்டமன்றத் தொகுதியிலும் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியில் கொமதேக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
கடந்த 17ஆண்டுகளுகளாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் பணியாற்றி வரும் சூரியமூர்த்தி, கடந்த 10 ஆண்டுகள் அக்கட்சியின் நிலைய செயலாளராகவும், 7 ஆண்டுகள் மாநில இளைஞரணி செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கைது - மு.க.ஸ்டாலின் கண்டனம்! - Arvind Kejriwal Arrested