சென்னை:நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. மற்றொரு புறம் தேர்தல் அதிகாரிகள் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் நபர்கள், பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றைத் தடுக்க தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 6ஆம் தேதி சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்த திருநெல்வேலி விரைவு ரயிலில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தாம்பரம் போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது, ரயிலில் சந்தேகத்திற்கிடமான மூன்று நபர்களிடமிருந்து ரூ.4 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் இருந்து பணம் கொண்டுவரப்பட்டதாகவும், இது நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் எனவும், தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் வாக்குமூலம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட தாம்பரம் போலீசார், இதுதொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அதையடுத்து, கடந்த 12ஆம் தேதி சென்னை அபிராமிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி கோவர்தனுக்குச் சொந்தமான ஒரு உணவகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.