சென்னை:சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6ஆம் தேதி திருநெல்வேலி விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தாம்பரம் காவல் துறையினர் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது ரயிலில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த மூன்று நபர்களிடமிருந்து சுமார் 4 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், கைப்பற்றபட்ட பணத்திற்கு எந்த ஒரு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் இருந்து பணம் கொண்டுவரப்பட்டதாகவும் இது நைனார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும், தேர்தலில் பண பட்டுவாடா செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் இது தொடர்பாக நையினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் சேர்ந்து போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி சென்னை அபிராமிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி கோவர்தனுக்கு சொந்தமான ஒரு ரெஸ்டாரண்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, அங்கு கணக்கில் வராத ஒரு லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் கைப்பற்றப்பட்ட நான்கு கோடியில் ஒரு கோடி ரூபாய் பணம் அந்த ரெஸ்டாரண்டில் வைத்து கைமாற்றப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, தாம்பரம் காவல் துறையினர் பாஜக நிர்வாகி கோவர்தனுக்கு சம்மன் அனுப்பியதன் அடிப்படையில் அவரது மகன் கிஷோர் கடந்த 15ஆம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி, தங்களுக்கும் தங்கள் ரெஸ்டாரண்டில் கைமாற்றப்பட்ட பணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் வாக்குமூலம் அளித்தார்.