தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற பிரஹன்நாயகி உடனாகிய நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்து உள்ளது. இதில் நவகன்னியர்களுடன் தனி சன்னதி கொண்டு வராஹி அம்மன் அருள்பாலிக்கிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் தனி சன்னிதியில் வடக்கு திசையை நோக்கிய நிலையில் பிராமஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமூண்டி ஆகிய நவ கன்னியர்களும் அருள்பாலிக்கின்றனர்.
வராஹி அம்மன் பூஜை (Credits - ETV Bharat Tamil Nadu) இதில், வராஹி அம்மன் வழிபாட்டிற்கு, பஞ்சமி திதி விசேஷமாக கருதப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் ஆனி மாத அமாவாசை முதல் 7 நாட்கள் ஆஷாட நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, ஆஷாட நவராத்திரியின் 2ஆம் நாளான நேற்று (சனிக்கிழமை) வாராஹி அம்மனுடன் உள்ள சப்த கன்னியருக்கும், எண்ணெய் காப்பு சாற்றப்பட்டது.
தொடர்ந்து வராஹி அம்மனுக்கு திரவியப்பொடி, மாப்பொடி, மஞ்சள்பொடி, தேன், பால், தயிர், சந்தனம் ஆகிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது, பிற ஆறு தேவியருக்கும் பாலாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து வராஹி அம்மனுக்கு விசேஷமாக, பால்கோவா, முந்திரி, திராட்சை உள்ளிட்ட இனிப்பு பலகாரங்கள் மற்றும் உலர் பழங்களைக் கொண்ட விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.
சப்த கன்னியர்களுக்கு புது வஸ்திரங்கள் மலர் மாலைகள் சாற்றி, சந்தன குங்குமப் பொட்டு வைத்து அலங்காரம் செய்து விசேஷ பூஜைகளுடன் அர்ச்சனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பஞ்ச தீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு வராஹி அம்மனை வழிபட்டனர்.
இதையும் படிங்க: 'ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதானவர்களை போலீஸ் காவலில் எடுக்கத் திட்டம்' - போலீசார் தரப்பில் தகவல் - ARMSTRONG MURDER CASE