திருச்சி: நாம் தமிழர் கட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்.25) திருச்சி வருகைதந்தார் அப்போது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் நான் போட்டியிடப் போவதில்லை. கடந்த காலத்தில் என் முன்னோர்கள் செய்த தவறு எனக்குப் படிப்பினை. உதாரணமாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ நாடாளுமன்றத்தில் பேசியதை இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்து சட்டமன்றத்தில் பேசியிருந்தால் அவரை மிஞ்சிய தலைவர் யாரும் இருந்திருக்க முடியாது.
நாம் தமிழர் கட்சியில் ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதைச் செய்கிறோம். தனித்தொகுதி என்பது இல்லை என்றால் இங்குத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பே இருக்காது. அரசியல் அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவருக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம். நிராகரிக்கப்பட்டவர்களை முன்னேற்றுவது தான் சமூக நீதி" என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்தி ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, "இத்தனை நாட்கள் ஆழ்நிலை தியானத்தில் கோமாவில் இருந்தாரா? நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அரை நூற்றாண்டுக் காலம் ஆண்டது காங்கிரஸ் கட்சி. இவ்வளவு நாள் அவர் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? தேர்தல் வரும் பொழுதுதான் எங்கள்மீது பாசம் வருகிறது இவை அனைத்தும் நாடகங்கள்" என்று பதில் அளித்தார்.