திருச்சி: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், “நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக இருந்து வரும் நான், யூடியூப்பில் சாட்டை என்ற சேனல் நடத்தி வருகின்றேன்.
சாட்டை துரைமுருகன் பேட்டி (credits - ETV Bharat Tamil Nadu) எனக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியுமான திருச்சி சூர்யா சிவா என்பவர் வலைத்தளத்தில் என்னைப் பற்றியும், என் மனைவியைப் பற்றியும் தரக்குறைவாகவும், அருவருத்தக்க வகையிலும் நேர்காணல் அளித்துள்ளார்.
மேலும், சீமானுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையும் விசாரித்து பார்த்தால் மிகவும் கேவலமாக இருக்கும் எனவும் தவறான முறையில் நேர்காணல் அளித்துள்ளார். எனவே, சூர்யா சிவா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சாட்டை துரைமுருகன், “என்னைப் பற்றியும், என் மனைவியைப் பற்றியும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பற்றியும் திருச்சி சூர்யா சிவா என்பவர் தரக்குறைவாக நேர்காணல் அளித்துள்ளார். இது குறித்து மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறோம் என கூறும் பாரதிய ஜனதா கட்சி, பொது வாழ்க்கைக்கு வந்துள்ளவர்களின் குடும்பத்தாரையும், அவர்களது குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் பேசி அப்புறப்படுத்த வேண்டும் என நினைப்பது எந்த வகையான அரசியல் என்பதை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
கடந்த ஐந்து நாட்களாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி சூர்யா சிவா வலைத்தளத்தில் கொடுத்த நேர்காணலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதை சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். திமுகவும், பாரதிய ஜனதா கட்சியின் ஊழல்களையும், அநீதிகளையும் எதிர்த்து சமூக வலைத்தளத்தில் பேசுகிறேன்.
பாரதிய ஜனதா கட்சியில் நடக்கக்கூடிய தவறுகளை எடுத்துப் பேசுகிறேன் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக உளவியல் ரீதியாக களங்கப்படுத்தி, அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். கொள்கை ரீதியாக சண்டை போட முடியாதவர்கள், அவதூறை கையில் எடுத்து திருச்சி சூர்யா சிவா என்ற ஒரு நபரை வைத்து திமுக, பாஜக இரண்டும் சேர்ந்து என்னை வீழ்த்த பார்க்கிறார்கள். இதனை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
இதை வழக்காக மாற்றி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மிகப்பெரிய சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்படும். எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்து போக முடியாது. குடும்பத்தையும், தாய் தகப்பனையும் பேசிய பிறகு பொது வாழ்க்கை அரசியல், கொள்கை என பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இது அண்ணாமலையின் தூண்டுதல். தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியின் பத்தாண்டு அவலங்களை தோல் உரித்து வருகிறோம். அண்ணாமலையால் நேரடியாக பேச முடியாது என்பதால், இது போன்ற நபர்களை வைத்துக் கொண்டு பேசவிடுகிறார்.
அண்ணாமலைக்கும், சீமானுக்கும் எப்போதெல்லாம் கருத்து முரண்பாடு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த சூர்யா சிவா, அமர் பிரசாத் ரெட்டி என்ற இவர்கள்தான் பேசுகிறார்கள். அண்ணாமலை நேருக்கு நேராக வாதம் வைத்தால் வைக்கட்டும்" என பேசினார்.
இதையும் படிங்க:தேர்தல் 2024: திமுக Vs அதிமுக; இருமுனைப் போட்டியில் ஈரோடு தொகுதியை கைப்பற்ற போவது யார்? - LOK SABHA ELECTION 2024