சென்னை:நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், கடந்த பிப்.2ஆம் தேதி காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திருச்சி, கோயம்புத்தூர், தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட 6 இடங்களில் என்.ஐ.ஏ அமைப்பு சோதனை நடத்தியது.
இது குறித்து என்.ஐ.ஏ வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2022ஆம் ஆண்டில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மூன்று நபர்கள் துப்பாக்கியுடன் தமிழ்நாடு க்யூ பிரிவு காவல்துறையினரிடம் பிடிபட்டனர். அந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், யூடியூப் பார்த்து துப்பாக்கி தயார் செய்தது தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டது.
இந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். என்.ஐ.ஏ விசாரணையில், கைது செய்யப்பட்ட மூவரும் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளாக இருப்பதும், அந்த இயக்கத்தை மீட்டு உருவாக்கம் செய்வதற்காக முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழக்கினுடைய தொடர்ச்சியாக, நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும், இந்த சோதனையின் முடிவில் ஒரு லேப்டாப், 7 செல்போன், 8 சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், பென்டிரைவ் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களைக் கைப்பற்றி இருப்பதாகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான புத்தகங்கள், அதன் தொடர்பான குறிப்புகள் உள்ளிட்ட ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளதாகவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம், இந்த வழக்கில் தொடர்புள்ளவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தியபோது சாட்டை துரைமுருகன், மதிவாணன், விஷ்ணு முருகன், இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் வீடுகளில் இல்லாததால் அவர்கள் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (பிப்.7) காலை சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், மதிவாணன், விஷ்ணு முருகன், இடும்பாவனம் கார்த்திக் ஆகிய நான்கு பேரும் முக்கிய ஆவணங்களுடன், வழக்கறிஞர்களுடன் ஆஜராக வந்தனர். அப்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்கறிஞர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என நுழைவு வாயில் வெளியே தடுத்து நிறுத்தி விட்டனர்.
இதையடுத்து, அவர்கள் நான்கு பேரும் கொண்டு வந்த ஆவணங்களை எடுத்துக் கொண்டு, என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு உள்ளே சென்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். தொடர்ந்து, இவர்கள் கொண்டு வந்த ஆவணங்களை வைத்தும், என்.ஐ.ஏ அதிகாரிகள் திரட்டி உள்ள ஆவணங்களை வைத்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணைக்குப் பின்பு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மருத்துவரை நியமிப்பதில் தமிழ்வழிக் கல்விக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ராமதாஸ் அறிவுறுத்தல்!