விழுப்புரம்: நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியத்தை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "இந்திய நாட்டினை மோடி மற்றும் மன்மோகன்சிங் ஆகிய இருவரும் பத்தாண்டுக் காலம் ஆட்சி செய்துள்ளனர். இந்த இருவரால் எந்த மாற்றமும் நிகழவில்லை, உலகில் வளரும் நாடுகளின் பட்டியலிருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த பத்தாண்டுகளில் மக்களுக்குப் பயனுள்ள எந்த ஒரு திட்டத்தையும் இதுவரை கொண்டுவரவில்லை. விவசாயிகள் இன்று வரை டெல்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் விளை பொருட்களுக்கு உரிய விலை கேட்டுப் போராடிக் கொண்டிருக்கும் போது அவர்கள் மீது தடியடி தாக்குதல், துப்பாக்கிச்சூடு தான் நடைபெறுகிறது.
பதவி, பணம் தான் எனக்கு வேண்டும் என்றால் எப்போதே யாருடனாவது கூட்டணி வைத்து அமைச்சராகி இருப்பேன், எத்தனை கோடிகள் கொட்டி கொடுத்தாலும் வேண்டாம் என்று தெருக்கோடியில் நின்றாவது என் மக்களுக்காகப் போராடுவேன்.
இன்று வரை போராடிக் கொண்டு தான் இருக்கிறேன். கர்நாடகாவில் தண்ணீர் தரமாட்டோம் என்று கூறுகிறார்கள், அவர்கள் அவ்வாறு கூறிய பின்பும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கூட்டணிக் கட்சிக்காகக் கர்நாடகா மாநிலம் சென்று வருகிறார், ஸ்டாலினின் உருவபொம்மையை அவர்கள் எரிக்கிறார்கள்.
ஆனால் எரித்தவர்கள் குறித்து திமுக இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. கர்நாடகாவில் உற்பத்தி ஆகும் தண்ணீர் அவர்களுக்குத் தான் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் இண்டியா கூட்டணி வைத்து நாட்டினை காப்பாற்றுவோம் என ஸ்டாலின் கூறுகிறார்.
நம் மாநில உரிமைகளைப் பறிகொடுத்தவர்கள் திமுகவினர், நம் மாநில உரிமையைப் பறித்தவர்கள் மத்திய அரசு. மேலும் மத்திய அரசு வரியைச் சுருட்டி எடுத்துக் கொண்டு பேரிடர் காலங்களில் நிதியை முறையாக வழங்குவதில்லை. இந்தியாவிலேயே நாட்டின் வருவாயைப் பெருக்குகிற மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது.
ஆனால் இத்தகைய வரியைத் திருப்பி அளிக்காமல் தமிழ்நாட்டை மத்திய தொடர்ந்து அரசு வஞ்சிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டிய மொழியில் விளம்பரங்கள் இல்லை என்றால் இருமடங்கு வரி உயர்வு ஏற்றப்படும் என்று அம்மாநிலம் அரசு அறிவித்துள்ளது.