சென்னை: வடசென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தேசப்பன்(38). எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத்தின் பேரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் எண்ணூர் பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள மதுபானக் கடையில் இவர் மது அருந்தச் சென்றுள்ளார்.
அப்போது பாரில் அவருக்கும் எண்ணூர் பர்மா நகரைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு, அது மோதல் வரை சென்றதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, வீட்டிற்குச் சென்ற தேசப்பன் உறங்கியுள்ளார். பின்னர் மாலை தேசப்பனின் மனைவியான தேவி வீட்டிற்கு வந்து கணவரை எழுப்பியுள்ளார். ஆனால், தேசப்பன் எழுந்திருக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அங்கு தேசப்பனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதனால் அதிர்ச்சியடைந்த தேவி எண்ணூர் காவல் நிலையத்தில் தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுபான கடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக தான், தேசப்பன் மரணம் நிகழ்ந்துள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, தேசப்பனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பிறகே இது கொலையா? அல்லது உடல் ரீதியான பிரச்சனை காரணமாக இறந்தாரா? அல்லது வேறு எதுவும் பிரச்சனையா? என்பது குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மது பாரின் சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணை செய்து வருகின்றனர்.
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறித்துச் செல்லும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu) இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு: சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் செல்போனை எடுத்துப் பேச முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அப்பெண்ணின் செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர்.
அதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், அலறி அடித்துக் கதறியுள்ளார். அதனைக் கண்டு அருகிலிருந்த நபர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அப்பெண் சிறுவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்பிச் சென்றதும், செல்லும் வழியும் செல்போனை எடுத்துப் பேச முயன்ற போது மர்ம நபர்கள் பறித்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து, செல்போனை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் நகைகளை பறித்துச் செல்வதும், கைபேசிகளை பறித்துச் செல்வதும் தொடர் கதையாகி வருகிறது என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
தற்போது, சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் செல்போனை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெரம்பலூரில் லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியார் நெஞ்சுவலி என நாடகம்! மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்!