சென்னை:தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் முத்துசாமி 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், "300 சதுர மீட்டருக்குள் கட்டட பரப்பளவு கொண்ட 14 மீட்டர் உயரத்திற்கு உள்ள அனைத்து வணிக கட்டிடங்களுக்கும் கட்டட முடிவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தை மதிப்பீடு செய்து வலுப்படுத்தவும், நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் சிறப்பாக செயல்படுத்துவதற்கு முழுமையான நிர்வாக அமைப்பை ஏற்படுத்தவும், பொது மக்களுக்கு எளிய முறையில் சேவைகளை வழங்கிட தொலைநோக்கு செயல் திட்டத்தை உருவாக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவுகளை புவியியல் தகவல் முறையில் புவிசார் கூறுகளை கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கான இணைய செயலை உருவாக்கப்படும் என்றும், தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு நகரில் உள்ளூர் திட்ட பகுதிக்கான நிலச் சேர்ம பகுதி வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
முழுமை திட்ட நில உபயோக வகைபாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள நிலப்பையன் தகவல் அமைப்பு உருவாக்கப்படும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் மற்றும் திருவண்ணாமலை மற்றும் மதுரையில் இரண்டு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு சொந்தமான நிலங்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் ரூ.130 லட்சம் செலவில் கட்டப்படும் என்றும் கூறினார்.
சென்னை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் 10 கூட்டு வசதி சங்கங்களுக்கு ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு அறையுடன் கூடிய இரும்பு பெட்டகங்கள் அமைக்கப்படும் எனவும் செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள இரண்டு கூட்டுறவு வீட்டு வசதி சமையலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
மாநிலத்தின் போக்குவரத்து திட்டமிடல் திறனை மேம்படுத்தும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடப் பிரிவாக போக்குவரத்து திட்டமிடல் பட்டத்திற்கான மேற்படிப்பு அறிமுகப்படுத்தப்படும்" எனவும் அறிவித்தார்.
இதையும் படிங்க:"முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் பதவி விலக வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி காட்டம்