திண்டுக்கல்:திண்டுக்கல் வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பட்டறை சரவணன். இவர் திண்டுக்கல் மாவட்ட கிழக்கு திமுக மாணவர் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மீன் கடை நடத்தி வந்தார்.
மேலும், இவர் மீது கொலை மற்றும் பிற குற்ற வழக்குகள் உள்ள நிலையில், இவருக்கும் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அல் ஆஷிக் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் திமுக பிரமுகர் பட்டறை சரவணன் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஷிக் ஆதரவாளர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையில் தொடர்புடைய ஆஷிக் முகமது, முகமது மீரான், கலில் அகமது, சதாம் உள்ளிட்ட 8 பேர் விருதுநகர் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.
திண்டுக்கல் எஸ்பி பிரதீப் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu) பழிக்கு பழி கொலை: இந்நிலையில், பட்டறை சரவணன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மாலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரனை அவரது வீடு புகுந்து பட்டறை சரவணன் ஆதரவாளர்கள் மாதவன், ராஜு, மணிகண்டன், தினேஷ் ஆகியோர் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் பட்டறை சரவணன் கொல்லப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து நடந்தது.
இந்த வழக்கில் ஒன்பது பேரை திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பட்டறை சரவணன் கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டாவது குற்றவாளியான முகமது இர்பானை, கடந்த செப்., 28 ஆம் தேதி திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பட்டறை சரவணன் ஆட்கள் வெட்டிக்கொலை செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான எடிசன் சக்கரவர்த்தி, மார்ட்டின் ரித்தீஷ், பிரவீன் லாரன்ஸ், ரிச்சர்ட் சச்சின் ஆகியோரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையின் ஆய்வாளர் வெங்கடாஜலபதி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, முகமது இர்பானை படுகொலை செய்தபோது பயன்படுத்திய ஆயுதங்களை திண்டுக்கல் மாலப்பட்டி அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக கொடுத்த தகவலின் அடிப்படையில், ரிச்சர்ட் சச்சினை காவலர்கள் ஐந்து பேர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, பதுக்கி வைத்திருந்த ஆயுதத்தால் தலைமை காவலர் அருண் பிரசாத்தை இடது கையில் வெட்டி தப்பித்து ஓடிய ரிச்சர்ட் சச்சினை, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி வலது கால் முழங்காலுக்கு கீழே சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். படு காயங்கள் அடைந்த தலைமை காவலர் அருண் பிரசாத் மற்றும் ரிச்சர்ட் சச்சினை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்து விவரித்துள்ளார்.
ரவுடிகள் இடையே ஏற்பட்ட தகராறில் பழிக்கு பழியாக அரங்கேறும் கொலை சம்பவங்களும், விசாரணைக்கு அழைத்து சென்ற போது தலைமைக் காவலரை வெட்டி விட்டு தப்பி ஓடிய ரவுடியை காவல்துறையினர் சுட்ட சம்பவமும் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்