சென்னை:தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சுமார் 10,000 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் போட்டி தேர்வு மூலம் முறையாக பணியமர்த்தப்பட்டு 4 முதல் 8 வருடங்கள் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர். பணியில் இணையும் போது இரண்டு வருடத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இன்று வரை மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்று உள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டும் இன்று வரை அதை நிறைவேற்றவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது.
கரோனா காலக் கட்டத்தில் சிகிச்சை வழங்க போட்டி தேர்வின் மூலம் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் சுமார் 2,500 பேர் இரண்டரை ஆண்டுகள் பணி முடித்த பின் எந்த முன்னறிவிப்பும் இன்றி ஒரே நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சை மற்றும் மகப்பேறு சேவை வழங்கும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு போன்ற அவசர மற்றும் அத்தியாவசிய விடுப்புகளும் மறுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் சுமார் 17,000 நிரந்தர பணியிடங்களும் 13,000 தொகுப்பூதிய பணியிடங்களும் உள்ள நிலையில், 40 சதவீதத்திற்கு மேல் நிரந்தர தன்மையற்ற தொகுப்பூதிய செவிலியர் பணியிடங்களாகவே உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 1,400 நிரந்தர செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.