கரூர்:கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் கூட்டணியில் கட்சிகளின் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, அதிமுக கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் எல்.தங்கவேலை அறிமுகம் செய்து வைத்தார். இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மார்க், மாவட்டத் தலைவர் முகமது அலி ஜின்னா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது,"கடந்த ஐந்து ஆண்டுகளாக கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் எம்.பியாக உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, தொகுதி மக்களைச் சந்திக்காதவர். தற்பொழுது மீண்டும் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி நிறுத்த உள்ளதாகக் கூறி வருகின்றனர் (தற்போது கரூர் காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி அறிவிக்கப்பட்டுள்ளார்).
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் எம்.பியாக இருந்த தம்பிதுரை, அன்று பாரதிய ஜனதா கட்சியுடன் தேர்தலைச் சந்தித்ததால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாஜக எதிர்ப்பு அலை வீசியது, அதனால் தம்பிதுரை தோற்கடிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொல்லி தேர்தலைச் சந்தித்தனர்.