சென்னை:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டுமனையை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியில் இருந்த கணேசன் என்பவருக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக, அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2012ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து அமைச்சரை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மார்ச் 28ஆம் தேதி எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, ஒரு லட்சம் ரூபாய்க்கான சொந்த பிணையும், அதே தொகைக்கான இரு நபர் பிணையும் செலுத்த வேண்டும் என்றும், வழக்கை தினந்தோறும் விசாரித்து ஜூலை மாதத்துக்குள் முடித்து உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கணேசன் மற்றும் அவரது மனைவி பத்மா ஆகியோர் நேரில் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவு படி ஒரு லட்சம் ரூபாய்க்கான பிணை தொகைக்கான உத்தரவாதம், இரு நபர் உத்தரவாதம் தாக்கல் செய்தனர்.