சென்னை: சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "என்.ஐ.ஏ சோதனை மூலம் நாங்கள் பாஜகவின் பி டீம் (B team) இல்லை என்பது உறுதியாகி உள்ளது" என்று தெரிவித்தார்.
அதையடுத்து, திமுகவின் குற்றச்சாட்டில் இருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டுள்ளோம் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, "நாங்கள் யாரையும் விமர்சனம் செய்யவில்லை. ஆனால், ஒரு ரெய்டுதான் தீர்மானம் செய்யும் என்றால், அதிமுக - பாஜகவுடனான கூட்டணியில் இருந்தபோதே சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதனால், இந்த ஒரு சோதனையினால் எந்த ஒரு நிலையும் மாறப் போவதில்லை" என்றார்.
தொடர்ந்து, திமுகவின் தேர்தல் அறிக்கை பற்றிய கேள்விக்கு, "ஒவ்வொரு முறை தேர்தல் அறிக்கை தயார் செய்யும்போது மக்களின் குறை நிறைகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் பின்னரே திமுக, தேர்தல் அறிக்கையை வெளியிடும். அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு படி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.