தூத்துக்குடி:தூத்துக்குடி, சுந்தரவேல் புரம் 2வது தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிட திறப்பு விழா இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மேற்கு வங்க மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து கருத்து கூறி இருக்கின்றேன். நான் மௌனம் சாதிக்கவில்லை. இதுகுறித்து நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பு நான் கருத்து கூறவில்லை என்று கூறுகிறார், அவரை முதலில் சமூக வலைத்தளத்தில் செக் பண்ண சொல்லுங்க” என்றார்.
மேலும், தூத்துக்குடி தருவைகுளம் மீனவர்கள் இலங்கையில் சிறையில் இருப்பது குறித்த நடவடிக்கை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சரிடம் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் எம்பிக்கள் மனு அளித்துள்ளோம். இங்கே இருக்கக்கூடிய பிரச்னைகளைச் சொல்லி இருக்கின்றோம். அவர்களை மீட்பதில் சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றது.