கோயம்புத்தூர்: கோவை சரவணம்பட்டி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டங்களைத் துவக்கி வைத்து நலத் திட்டங்களை வழங்கினார். மேலும், அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, நீலகிரி எம்.பி ஆ.ராசா, கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் உட்பட அரசு அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் மேடையில் உரையாற்றிய நீலகிரி எம்.பி ஆ.ராசா, "இந்த நிகழ்ச்சி மலைப்பாகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நானும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் அனைவரும் கலைஞருடன் பயணித்தவர்கள். இன்றைய முதலமைச்சர் உடனும் பயணித்துக் கொண்டிருப்பவர்கள். அந்த வகையில், தற்பொழுது தம்பி உதயநிதியுடனும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.